கன்னியாகுமரி,
கன்னியாகுமரி ஐகிரவுண்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் விவேக் (வயது 28). இவரும், இவருடைய தம்பி பாலா என்பவரும் சேர்ந்து கன்னியாகுமரி, சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கடற்கரையில் பேன்சி கடை நடத்தி வருகிறார்கள். நேற்றுமுன்தினம் வியாபாரம் முடிந்த பின்பு ஸ்ரீராம் விவேக்கும், பாலாவும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
நேற்று காலையில் அண்ணன்தம்பி இருவரும் கடையை திறக்க வந்தனர். கடையை திறந்து உள்ளே சென்ற போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது.
பணம் கொள்ளை
அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம் விவேக், கடையின் கல்லா பெட்டியை பார்த்த போது அதுவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரொக்க பணம் ரூ.18 ஆயிரம் மற்றும் இன்னொரு பர்சில் வைத்திருந்த ரூ.300 ஆகியவை மாயமாகி இருந்தது. அதோடு கடையில் இருந்த 62 கண் கண்ணாடிகளையும் காணவில்லை.
யாரோ மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து பணத்தையும், கண் கண்ணாடிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? உள்ளூர் கொள்ளையர்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.