மாவட்ட செய்திகள்

பதிவு பெறாமல் நடத்தப்படும் மகளிர், குழந்தைகள் விடுதி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு சிறை - கலெக்டர் நிர்மல்ராஜ் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் மகளிர், குழந்தைகளுக்கான விடுதியை பதிவு பெறாமல் நடத்தினால் அதன் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

வீட்டை விட்டு வெளியே தங்கும் மாணவிகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் மாணவிகள் விடுதி, பணியாற்றும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். விடுதிகள் மற்றும் இல்லங்களை அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன.

விடுதிகள், இல்லங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும்போது பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனை உறுதி செய்ய தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 2014 மற்றும் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குப்படுத்துதல்) விதிகள் 2015 ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, நடைமுறையில் உள்ள இச்சட்டத்தின்படி மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதி நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்து நடத்த வேண்டும்.

விடுதிகள், இல்லங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், சட்டம் மற்றும் விதிகள் போன்ற விவரங்கள் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்ட நடைமுறைகளின்படி பதிவு பெறுவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்துபவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவு பெறாமல் விடுதிகள், இல்லங்கள் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்