திருவொற்றியூர்,
சென்னையை அடுத்த மணலி அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் சாக்ரடீஸ் (வயது 25). இவர், மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் கொலையான சாக்ரடீஸ் பெயிண்டர் வேலை செய்து வந்ததும், வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மூடிக்கிடக்கும் பள்ளியில் அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் கஞ்சா புகைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சாக்ரடீசை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை கொருக்குபேட்டையை சேர்ந்த பரத் (21), தினேஷ்குமார் (22), மணலியைச் சேர்ந்த அஸ்வின்குமார் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
கைதான அஸ்வின்குமாரிடம், சாக்ரடீஸ் அடிக்கடி கஞ்சா கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின்குமார், தனது நண்பர்களான பரத், தினேஷ்குமாருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் கஞ்சா புகைக்கும்போது சாக்ரடீசை வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
கொலையான சாக்ரடீஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் பிரசாந்த் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.