கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருக்கு வினோத்குமார் (வயது 25), கனகராஜ் (22), கார்த்திக் (20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் கனகராஜ், அதேப்பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியாவை (16) தீவிரமாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களின் காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் கனகராஜ், தனது காதலியை திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையை சந்தித்தார். அவர், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஸ்ரீரங்கராயன் ஓடை அருகே ஒரு வீட்டில் தங்க வைத்தார். இதை அறிந்த வினோத்குமார் அங்கு சென்று கனகராஜிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், தம்பி என்றும் பாராமல் கனகராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும் அரிவாளால் வெட்டிவிட்டு வினோத்குமார் தப்பிச்சென்றார்.
இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வர்ஷினி பிரியா கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த கவுரவக்கொலை குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கவுரவக்கொலை செய்ய தூண்டியதாக வினோத்குமாரின் நண்பர்கள் சின்னராஜ் (27), கந்தவேல் (23), அய்யப்பன் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே கவுரவக்கொலை செய்த வினோத்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மேட்டுப்பாளையம் போலீசார் கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வினோத்குமார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல், வினோத்குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் அழைத்துச்சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.