மாவட்ட செய்திகள்

4 கரடிகள் சேர்ந்து தாக்கியதில் வாலிபர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கீரிப்பாறை அருகே ஆலங்குடி வாலிபரை 4 கரடிகள் சேர்ந்து தாக்கின. இதில் அவரது ஒரு கண் சிதைந்தது. படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் ஏராளமான வனப்பகுதியும், தனியார் எஸ்டேட்டுகளும், அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும் உள்ளன. இப்பகுதியில் ரப்பர், வாழை, கிராம்பு, மிளகு போன்றவை பயிர்செய்யப்படுகிறது.

இங்குள்ள மாறாமலை பகுதியில் அச்சங்காடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த ஞானசேகர்(வயது 32) என்பவர் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் ஞானசேகர் நேற்று காலை 7 மணியளவில் தோட்டப்பகுதிக்கு வேலைக்கு வந்தவர்களை கண்காணிக்க நடந்து சென்றார். அப்போது, அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த 4 கரடிகள் சேர்ந்து அவரை தாக்கின.

கரடிகளிடம் சிக்கிய ஞானசேகர் காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொழிலாளர் கூட்டமாக வருவதை கண்ட கரடிகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு தப்பிச்சென்றன.பின்னர் தொழிலாளர்கள், ஒரு கண் சிதைந்த நிலையில் படுகாயத்துடன் கிடந்த ஞானசேகரை மீட்டனர்.உடனே அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடிகள் தாக்கி எஸ்டேட் கண்காணிப்பாளரின் ஒரு கண் சிதைந்த சம்பவம் அப்பகுதி தோட்ட தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிக்குள் வேலைக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி தொழிலாளர்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்டம் மற்றும் தனியார் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை அடிக்கடி வன விலங்குகள் தாக்குகின்றன. இதில் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். எனவே வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து தொழிலாளர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதையும் அரசு கைவிடவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு