மாவட்ட செய்திகள்

46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி: குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்தவர், சி.பி.சி.ஐ.டி. பிடியில் சிக்கினார்

குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சி.பி.சி.ஐ.டி.யின் பிடியில் சிக்கி உள்ளார். அவர் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சிவகங்கை,

சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் ராமேசுவரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தது சர்ச்சையானது. இதுகுறித்த தீவிர விசாரணையில் அவர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரூப்-4 தேர்வில் சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்த திருவராஜ் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்தார். அவரது வெற்றியில்தான் பெரிய சர்ச்சை ஆரம்பமானது.

இவர் ஏற்கனவே 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர். ஆனால் இந்தமுறை அவர் முதல் இடத்தை பிடித்தது சந்தேகத்துக்கு காரணமானது. மேலும் திருவராஜ் பயிற்சி மையத்தில் நீண்ட காலம் பயிற்சி எடுக்கவில்லை. அவர் ஆடு மேய்த்து வந்தார். மேலும் அவருக்கு வயது 46 என்று கூறப்படுகிறது.

எனவே அவரால் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்க முடியுமா? என்ற சந்தேக கண்ணோட்டம்தான் இதுகுறித்த விசாரணையில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவராஜ் திருமணமானவர். அவருக்கு விஜயா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர், தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்வார். ராமநாதபுரம் மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆட்டுக் கிடைகள் அமைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவராஜ் வழக்கமாக சிவகங்கை மையத்தில்தான் போட்டித்தேர்வை எழுதி இருக்கிறார். ஆனால் கடந்த முறை ராமேசுவரத்தில் எழுதினார்.

தேர்வு முடிவை பார்ப்பதற்காக சிவகங்கையில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பெண்ணிடம் தான் பெற்ற மதிப்பெண்ணை இணையதளத்தில் பார்க்க கூறினார். அப்போது, அவரது பிறந்த தேதி, தேர்வு பதிவு எண் கேட்கப்படுவதாக அந்த பெண் திருவராஜிடம் கூறியுள்ளார். அவர் தனது பிறந்த தேதியை கூறியபோது அவருக்கு 46 வயது என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த பெண் 46 வயதில் எப்படி தேர்வு எழுத அனுமதி கிடைத்தது? என கேட்டுள்ளார். அதற்கு, உனது வேலையை மட்டும் பார். தேவையற்றதை பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், திருவராஜ் பெற்ற மதிப்பெண், வயது உள்ளிட்ட விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவுசெய்ததாகவும், இந்த பதிவை அந்த பெண்ணின் நண்பர்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ராமேசுவரத்தில் தேர்வு எழுதிய திருவராஜ், சிவகங்கை பகுதியை சேர்ந்த இடைத்தரகர் உதவியை நாடி இருக்கலாம்? என்று தெரியவருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தேர்வு முடிவு வெளியாகி சர்ச்சை எழுந்தபோது திருவராஜ், தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். பின்னர் சில நாட்களில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் தலைமறைவு ஆகவில்லை என்றும், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி நிரபராதி என்று நிரூபிப்பேன் எனவும் பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னையில் வசிக்கும் சிவகங்கை பகுதியை சேர்ந்த ஒருவர், ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த சிலரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வைத்து, அதன் மூலம் முறைகேடாக வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதை அறிந்த திருவராஜ் அந்த நபரை அணுகி குரூப்-4 வேலைக்கு முயன்றதாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் ராமேசுவரத்திற்கு சென்று தேர்வு எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பான விசாரணையும் சூடுபிடித்துள்ளது. திருவராஜிடம் விசாரணை முடிந்த பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை பகுதிக்கு நேரடி விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை