மாவட்ட செய்திகள்

தீ விபத்தில் 49 வீடுகள் நாசம்; ரூ.2 கோடி சேதம் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால்

அதிராம்பட்டினத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் 49 வீடுகள் நாசமாயின. இதில் ரூ.2 கோடி மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன. தீ விபத்தின்போது கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மருதையன். மீனவர். இவருடைய வீட்டில் நேற்று சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீட்டு கூரையில் தீப்பற்றியது. இந்த தீ அருகே இருந்த கூரை வீடுகளுக்கும் மளமளவென பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மருதையன், தஞ்சை மாவட்ட நாட்டுபடகு மீனவர் சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரின் வீடுகள் உள்பட 49 வீடுகள் நாசமாயின.

தீ விபத்தின்போது 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டன.

ரூ.2 கோடி சேதம்

ஒரே நேரத்தில் 49 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்களும், தீயணைப்பு படை வீரர்களும் மிகுந்த அவதிக்கு ஆளாயினர். விபத்து நடந்த பகுதியில் மீனவர்கள் அதிகம்பேர் வசித்து வருகிறார்கள். தீ விபத்தில் மீனவர்களின் வீடுகளில் இருந்த மீன்பிடி வலைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அதேபோல டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள், 60 தென்னை மரங்கள் தீயில் கருகின. 6 ஆடுகள் இறந்தன. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. வீடுகளில் இருந்த ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பத்திரங்களும் எரிந்து நாசமாயின.

கான்கிரீட் வீடுகள்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சேகர் எம்.எல்.ஏ., தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன், தாசில்தார் ரவிச்சந்திரன், பா.ஜனதா மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டுக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என கூறினார். தற்போது கரையூர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயங்கர தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?