பெங்களூரு,
துமகூருவில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நேற்று விவசாயிகள் மாநாடு நடை பெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சாதனை படைத்த 28 விவசாயிகளுக்கு கிருஷி கர்மான் விருதுகளை வழங்கினார்.
மேலும் மத்திய அரசின் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கிருஷி சம்மான் திட்டத்தில் 8 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் மட்டும் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் அரசுகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
புத்தாண்டு கொண்டாடும் இந்த நேரத்தில், அனைத்து மாநிலங்களும் தகுதியான விவசாயிகளை இந்த திட்டத்தில் பதிவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு கட்சிக்கு அரசியல் ஆதாயம் வந்து விடும் என்று சில கட்சிகள் கருதுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலையை 1 மடங்கு உயர்த்தி இருக்கிறோம். விவசாய விளைபொருட்களை சேகரித்து அவற்றை பதப்படுத்தி வைக்க தேவையான மையங்களை அமைத்து வருகிறோம்.
விவசாயிகள் தங்களின் நிலத்தில் உற்பத்தி செய்யும் சூரியசக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை 500 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்துவதில் விவசாயிகளின் பங்கும் உள்ளது. இதற்காக சாலை உள்ளிட்ட விவசாயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். ஏற்றுமதியில் தென்இந்தியாவின் பங்கு முக்கியமானது. இதற்கு இங்கு நிலவும் வானிலை, மண் வளம், கடல் வளம் போன்றவை காரணம் ஆகும். இந்த சாதகமான அம்சங்கள் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் ஏற்றுமதியில் இதை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானாவில் தோட்டக்கலை விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த அதற்கான பதப்படுத்தும் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறோம். சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, குடகு ஆகியவற்றின் காபியும், பெங்களூருவில் புளியும் பிரபலமானது. இவற்றின் மேம்பாட்டிற்கு அவை சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். நாட்டில் சாம்பார் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
25 லட்சம் டன் உற்பத்தி மூலம் ஏற்றுமதி ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.19 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. மஞ்சள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவில் உற்பத்தி ஆகியுள்ளது. தெலுங்கானா இன்று மஞ்சள் உற்பத்தியின் மையமாக உள்ளது. கர்நாடகத்திலும் அதிகளவில் மஞ்சள் உற்பத்தியாகிறது.
தென்இந்தியாவில் காபி மற்றும் மாதுளை அதிகமாக விளைகிறது. தேங்காய் தேவையை கவனத்தில் வைத்து அதற்கும் நல்ல விலை கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை செய்வோம். ரப்பர் உற்பத்தியை பெருக்க ஊக்கம் அளிக்கப்படும்.
காபி கர்நாடகத்தின் பெருமை. இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க ஒருங்கிணைக்கப்பட்ட காபி மேம்பாட்டு திட்டத்த செயல்படுத்துவோம். தென்இந்திய மாநிலங்களில் பயிறு வகைகள், எண்ணெய் பயறுகள் விளைச்சலில் முக்கிய பங்கு உள்ளது. தென்இந்தியாவில் மீன்பிடி தொழிலை அதிகப்படுத்த நல்ல வாய்ப்பு உள்ளது. கிராமங்களில் அதிக முன்னுரிமை அளிப்பது, பொருளாதார உதவிகளை வழங்குவது, புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது, நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
மீனவர்களுக்கு கிசான் கார்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்கு தேவையான நவீன வசதிகளை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புதிய படகுகளை வழங்கவும், நவீன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் மாநிலங்களுக்கு ரூ.2,500 கோடி நிதி வழங்கியுள்ளோம். ஆழமான கடலில் மீன்பிடிக்க படகுகளில் நவீன வசதிகள், மீனவர்களின் பாதுகாப்புக்கு இஸ்ரோ உதவியுடன் உபகரணங்களை உருவாக்கி கொடுத்துள்ளோம்.
கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நீர் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கியுள்ளோம். நிலத்தடி நீரை அதிகரிக்க இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
கிருஷி கர்மான் விருதை, பிற துறைகளுக்கும் விரிவுபடுத்த தோன்றுகிறது. ஊட்டச்சத்து, தோட்டக்கலை, இயற்கை விவசாய பணிகளில் சாதிப்பவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படும். இதனால் அவர்களுக்கும் ஊக்கம் கிடைக்கும். 2022-ம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாங்கள் ஒரு இலக்கு ஏற்படுத்தி, அதை அமல்படுத்துவதே நமது முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த வேண்டும். நமது அனைத்து இலக்குகளையும அமல்படுத்தியே தீருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
இந்த விழாவில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், சதானந்தகவுடா, பிரகலாத்ஜோஷி, சுரேஷ் அங்கடி, மாநில மந்திரிகள் சோமண்ணா, மாதுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, பிரதமரிடம் இருந்து விருது பெற்றார். அப்போது தமிழக அதிகாரி ககன்தீப்சிங்பேடியும் உடன் இருந்தார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு துமகூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பகல் 3.30 மணிக்கு இந்த விழா தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். அதன் பிறகு 4 மணிக்கு பேச்சை தொடங்கிய அவர் 4.45 மணிக்கு உரையை நிறைவு செய்தார். மோடியின் இந்தி பேச்சை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு எடியூரப்பா பச்சை பட்டு சால்வை அணிவித்தார். அந்த சால்வை தோள் மீது போர்த்தியபடியே மோடி உரையாற்றினார். இந்த உரையில் முழுக்க முழுக்க விவசாயம் தொடர்பான விஷயங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அரசியல் தொடர்பான கருத்துகளை அவர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு மோடி, ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு வந்தார்.