செம்பட்டு,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 19-ந்தேதி நள்ளிரவு ஒரு தனியார் விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய சென்னை நெற்குன்றம் பாலகிருஷ்ணன் நகர் 4-வது தெருவை சேர்ந்த முகமது சலீம் (வயது 49) என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மலேசியாவில் இருந்து 200 கிராம் எடையுள்ள மொத்தம் 6 தங்க கட்டிகளை ஆணுறைக்குள் போட்டு வாழைப்பழத்தில் வைத்து விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். விழுங்கிய தங்க கட்டிகளை வெளியே எடுப்பதற்காக அவரை அதிகாரிகள் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இனிமா (வயிற்றுப்போக்கு மாத்திரை) கொடுத்து ஆணுறையில் போட்டு விழுங்கிய 30 கிராம் தங்க கட்டியை கடந்த 21-ந்தேதி டாக்டர்கள் எடுத்தனர். நேற்று முன்தினம் இதே சிகிச்சை அளித்து முகமது சலீமின் வயிற்றில் இருந்த மேலும் 4 தங்க கட்டிகளை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். மீதமுள்ள தங்க கட்டிகளை வெளியே எடுக்க டாக்டர்கள் தொடர்ந்து போராடி கொண்டிருந்த சூழ்நிலையில் நேற்று மாலை அவரிடம் இருந்து 2 தங்க கட்டிகளை வெளியே எடுத்தனர்.
முகமது சலீமிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது 200 கிராம் எடையுள்ள மொத்தம் 6 தங்க கட்டிகளை விழுங்கியதாக தெரிவித்தார். ஆனால் அவர் மொத்தம் 7 தங்க கட்டிகளை விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 7 தங்க கட்டிகளையும் அதிகாரிகள் மீட்டனர். அவற்றின் மொத்த எடை 205 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.