இந்த நிலையில், நேற்றும் பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிட்டி மார்க்கெட் பகுதியில் வந்த ஒரு காரை போலீசார் தடுத்த நிறுத்தினார்கள். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க காரை டிரைவர் வேகமாக ஓட்டியதில், அங்கிருந்த தடுப்பு வேலியில் மோதியது. இதில், கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அந்த காரை பறிமுதல் செய்தனர். கார்ப்பரேசன் சர்க்கிள் அருகே ஒரே ஆட்டோவில் 8 பேரை ஏற்றி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் நேற்று ஒட்டு மொத்தமாக ஊரடங்கு உத்தரவை மீறியதாக 897 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் 777 இருசக்கர வாகனங்கள் ஆகும். மேலும் என்.டி.எம்.ஏ. சட்டத்தின்படி நேற்று மட்டும் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.