மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மனைவி ஜான்சி ராணி, மகன் சாமுவேல் (வயது 3) மகள் ஜெர்சி ஆகியோருடன் அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும்போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதுவது போல் உரசி சென்றது. இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் மாரிமுத்துவின் மகன் சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மாரிமுத்து, அவரது மனைவி ஜான்சிராணி, மகள் ஜெர்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.