மும்பை,
மலாடு, சோம்வாரி பஜார் அருகே பாம்பே டாக்கீஸ் தொழிற்பேட்டை பகுதி உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கடையில் நேற்று காலை 11.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதேபோல ஒரு ஆம்புலன்சும் அங்கு வந்தது.
இந்தநிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் கடைகள், குடோன்களில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.