நாகப்பட்டினம்,
நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோவில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியாக சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் இறந்து விட்டால் பரவையாற்றில் இறங்கிதான் உடலை சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. பரவையாற்றில் கடல் நீர் புகுந்து அதிக அளவு தண்ணீர் ஓடும். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த சித்தானந்தம் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை வடக்கு பொய்கை நல்லூர் பிரதான சாலையில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பரிமளச்செல்வன் தலைமையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் பிரான்சிஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆதிதிராவிடர்களுக்கு தனிசுடுகாடு அமைக்க 2 ஏக்கர் அரசு நிலம் தருவதாக தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
6 பேர் மீது வழக்கு
இந்த சாலை மறியல் போராட்டத்தால் வடக்கு பொய்கை நல்லூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.