ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் அகமது (வயது 45) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசினார். உடனே அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.92 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 330 கிராம் எடைக்கொண்ட 20 தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள்.
இதைப்போல் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஹிக்கமத்துல்லா (40), நைனா முகமது (30), முஸ்தபா (27), முகமது நோவான்(23) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் 4 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.