நாக்பூர்,
மராட்டியத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி மாவட்டம் பம்ராகார் தாலுகாவில் அமைந்துள்ளது பழங்குடியினர் கிராமமான கோஷ்புந்தி. கடந்த 18-ந்தேதி இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் புகுந்து சூறையாடினர். மேலும் அங்கிருந்த 6 பேரை கடத்திச்சென்றனர். கடத்தப்பட்டவர்களில் 3 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 3 பேரின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.
இந்தநிலையில் அடர்ந்த வனப்பகுதியில் கடத்தப்பட்ட 3 பேரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இதில், சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் பெயர் மல்லா மாதவி, கன்னா மாதவி மற்றும் லால்சு குதேடி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களின் உடல்கள் அருகே 40 தோழர்களின் உயிரிழப்புக்கு பழிவாங்கும் விதமாக, அதற்கு காரணமான போலீஸ் உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற வாசகம் அடங்கிய பதாகையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்சிரோலியில் போலீசார் நடத்திய 2 துப்பாக்கி சூடு சம்பவத்தில் 40 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின்போது நக்சலைட்டுகளின் இருப்பிடம் குறித்து உளவு பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கருதி பழங்குடியினர் 3 பேரையும் நக்சலைட்டுகள் சுட்டு கொன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.