மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் விபத்து: அரசு பஸ்-கார் மோதல்; நண்பர்கள் 2 பேர் பலி

பாளையங்கோட்டையில் நேற்று அதிகாலையில் அரசு பஸ்-கார் மோதிக் கொண்ட விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள். வீடு கிரகப்பிரவேசத்துக்கு பொருட்கள் வாங்க சென்றபோது இந்த பரிதாபம் நேர்ந்தது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பால்பண்ணை அருகே வசித்து வந்தவர் தணிகாசலமூர்த்தி மகன் சோமசுந்தரம் (வயது 25). இவரும், தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே உள்ள ஆறுமுகபுரத்தை சேர்ந்த ஜான்ஆபிரகாம் மகன் நெகேமியா (25) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கார் கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சோமசுந்தரம் ரெட்டியார்பட்டி பகுதியில் புதிய வீடு கட்டி இருந்தார். அந்த வீட்டுக்கு நேற்று காலையில் கிரகப்பிரவேசம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தனது நண்பர் நெகேமியாவை, சோமசுந்தரம் அழைத்து இருந்தார். அவரும் வந்து இருந்தார்.

நேற்று அதிகாலையில் கிரகப்பிரவேசத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க சோமசுந்தரமும், நெகேமியாவும் ரெட்டியார்பட்டியில் இருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டனர். காரை நெகேமியா ஓட்டினார். பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது, அந்த வழியாக சென்ற அரசு விரைவு பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

இடிபாடுகளுக்குள் சிக்கி சோமசுந்தரம், நெகேமியா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சோமசுந்தரம், நெகேமியா ஆகியோரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்