மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் விபத்து: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பட்டதாரி வாலிபர் பலி

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபர் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு.

தினத்தந்தி

நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகே உள்ள கற்காட்டை சேர்ந்தவர் பப்பன். அவருடைய மகன் வேணு (வயது 25). பி.எஸ்சி. பட்டதாரி. இவர், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

இந்த நிலையில் வேணு நேற்று மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் இரவு 9 மணி அளவில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவருக்கு முன்னால், கீரிப்பாறை-நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் ஒன்று பணிமனையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் வேணு, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது, பஸ்சின் பக்கவாட்டில் மோட்டார்சைக்கிள் உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அவர், மோட்டார் சைக்கிளுடன் விழுந்து பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், வேணு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், ஸ்டான்லி ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேணுவின் உறவினர்களும் வந்தனர். அவர்கள், வேணுவின் உடலை பார்த்து கதறியது பரிதாபமாக இருந்தது.

வேணுவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம்குறித்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தினால் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்