கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவையொட்டி மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி இறைச்சி, மீன் கடைகள் வைக்கும் கடைக் காரர்கள் மீது அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம்பிள்ளை தெருவில் இறைச்சி கடை திறந்து இருப்பதாக தாசில்தார் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாசில்தார் செல்வக்குமார், சிறப்பு தாசில்தார் மகேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒருவர் இறைச்சி கடையை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் கடையை மூடுமாறும், இல்லையெனில் கடையை பூட்டி சீல் வைப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர் கடையை மூட முடியாது என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். உடன் அதிகாரிகள் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறைச்சி கடைக்காரரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் அந்த இறைச்சி கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கடலூர் வண்டிப்பாளையத்தில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடையில் இருந்த பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இறைச்சி கடைக்காரரிடம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் பகுதியில் இறைச்சி மற்றும் மீன் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் குணமங்கலம் மற்றும் வாழப்பட்டு காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை நடைபெற்று வந்ததும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் இறைச்சி வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து இறைச்சிக்கடையில் இருந்த பொருட்கள் மற்றும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை நகராட்சி ஊழியர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் பள்ளம் தோண்டி கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெள்ளக்கேட் பகுதியில் உள்ள குளத்தில் மர்ம நபர்கள் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி மீன்களைப் பிடிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மின்மோட்டாரை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.