கோவில்பட்டி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, ஒன்றிய செயலாளர் முருகேசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தனம், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் ரமேஷ் மூர்த்தி, தொழிற்சங்கம் ராஜசேகர், சுப்புராயலு, ம.தி.மு.க. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அழகுசுந்தரம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், விவசாய அணி மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ஜூனன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், சி.ஐ.டி.யு. கிருஷ்ணவேணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்து பேசி வருகிறார்கள். விவசாயிகளும் போராடி வருகிறார்கள். ஆனால், அதை எல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இந்த மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாக்களை திரும்ப பெறும் வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.
விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் கேட்கும் பாதுகாப்புகளை மசோதாவில் கொண்டு வரவேண்டும். ஏனென்றால் இது ஆன்லைன் வர்த்தகத்துக்கு உதவியாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமையாக்க கூடியதாகவும் உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் பொது வினியோக முறையையே அழித்துவிடக் கூடிய வகையிலும், நுகர்வோருக்கு எதிரான வகையிலும் உள்ளது. இந்த மசோதாக்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து மக்களிடம் கொண்டு சென்று இதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை விளக்குவதற்கான களமாக தான் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் போராட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.