தேர்தல் பிரசாரம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் போட்டியிடுகிறார். இவருக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தொகுதியில் உள்ள ஆலயங்களில் பங்கு அருட்பணியாளர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.இவர் நேற்று முழுக்கோடு, முதப்பன்கோடு, மஞ்சாலுமூடு, மலையடி, மாங்கோடு, புலியூர்சாலை, பளுகல், மேல்புறம் போன்ற பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:-
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சேதமடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
தடுப்பணைகள்
குழித்துறை தாமிரபரணி ஆற்றுநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்படும். புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும். தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.