கிருஷ்ணகிரி,
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஅள்ளி, கிருஷ்ணகிரி ஒன்றியம் தேவசமுத்திரம், கட்டிகானப்பள்ளி ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவில் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 18 அம்மா மினி கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
இந்த கிளினிக்கில் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்க கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனைக்கான சிகிச்சைகள் வழங்கப்படும். இங்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் தெர்மா மீட்டர் உள்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து 45 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் ஊட்டச்சத்து நல பெட்டகம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.