மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டு ஆளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்து(வயது 45). இவர் மணப்பாறை நகரின் கடைசி பகுதியான பொத்தமேட்டுப்பட்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அலுமினியத்தால் ஆன ஒரு பொருளை கடையில் வேலை பார்த்த பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன்(50)சுத்தியலால் அடித்து உடைத்தார்.
தூக்கி வீசப்பட்டனர்
அப்போது அந்தப் பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கடையில் இருந்த பொருட்கள் சிதறியதுடன் அருளானந்து ,மாரியப்பன், பக்கத்தில் உள்ள பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை பார்த்த நல்லாம்பிள்ளையைச் சேர்ந்த பால கிருஷ்ணன்(17), கடையில் இருந்த பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ்(65) ஆகிய 4 பேரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இரும்பு கடையில் இருந்து வந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்தனர். அப்போது அங்கு 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மாரியப்பனை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கும், மற்ற 3 பேரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
பரிதாப சாவு
இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அதிக அளவிலான வீடு, கடைகள், தனியார் மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் சென்டர் போன்றவை இருக்கும் பிரதான திருச்சி சாலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பதறிப்போய் அங்கும் இங்குமாக ஓடினர்.
ராணுவ குண்டு
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரை அடுத்த வீரமலைப்பாளையம் மலை அடிவாரத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். ராணுவ வீரர்களின் பயிற்சி முடிந்த பின்னர் வெடிக்காத குண்டுகளை அந்த பகுதி மக்கள் சேகரித்து இதுபோன்று பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்வார்கள்.
அதேபோன்று தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. அதில் வெடிக்காத குண்டை யாரோ இந்த பழைய இரும்பு கடையில் கொடுத்து இருக்கிறார்கள். அந்த குண்டை உடைக்க முயற்சித்த போது தான் இந்த விபரீத சம்பவம் நடந்து இருக்கிறது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொண்டு வந்தது யார்?
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமலைப்பாளையம் பகுதியில் வருடத்தில் சில மாதங்கள் அவ்வப்போது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். வெடித்த குண்டுகளின் துகள்களை பொறுக்கி அந்த பகுதி மக்கள் பழைய இரும்பு கடையில் விற்று விடுவது உண்டு. இதுபோன்று ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது வெடித்தது ராணுவ வீரர்களின் பயிற்சிக்கு பயன்படுத்திய வெடிக்காத குண்டு என தெரிகிறது. அந்த குண்டை கடையில் விற்றுச் சென்றவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் காலை முதல் மாலை வரை திருச்சி சாலை பரபரப்பாகவே காணப்பட்டது.