வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 7-வது வார்டு நந்திவரம் காலனி பகுதியில் தமிழக அரசின் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் நேற்று காலை 9 குழந்தைகள் வழக்கம் போல் அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கன்வாடி மையத்தில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற் கூரையில் இருந்த சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது.
இதனை பார்த்த அங்கன்வாடி பணியாளர் உடனே 9 குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்துவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக 9 குழந்தைகளும் எந்த விதமான காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.
இது குறித்த தகவல் அந்த பகுதியில் பரவியது. உடனே அந்த குழந்தைகளின் பெற்றோர் அங்கன்வாடி மையத்திற்கு திரண்டு வந்தனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அதன் பின்னர் அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் வரை இந்த அங்கன்வாடி மையம் தற்காலிகமாக அருகில் உள்ள அரசு பள்ளிக்கூட்டத்தில் செயல்படுவதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் அங்கன்வாடி மையம் கட்டும்போது தரமான முறையில் கட்டுமானங்கள் நடைபெறுகிறதா? என்பதை காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பணி மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.