கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு நடைமுறை காலங்களில், குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே அங்கன்வாடி பணியாளர்கள், குடும்ப வன்முறை சம்பவங்களின் குறைகளைத் தணிக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக தற்காலிகமாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இது தொடர்பான தொலைபேசி அழைப்புகளை ஏற்று தகவலை தங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மூலமாக இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள், பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட சமூக நல அலுவலர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களின் தொலைபேசி எண்கள் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதனை பரவலாக விளம்பரப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட திட்ட அலுவலர்கள் இதனை கண்காணித்திடும் போது இது தொடர்பான புகார்கள் எந்தவித காலதாமதமின்றி தெரிவிக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களால் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.