மாவட்ட செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

சிதம்பரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் கடந்த 10-ந்தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடித்தது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை 10 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே திரண்டனர்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர் லைட் ஆலையை மூட கோரியும், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும், 5 மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் மாணவ-மாணவிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பிற்பகல் 3 மணி அளவில் பூமா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மாணவர்கள் அண்ணாமலைநகர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கூடிய விரைவில் தமிழகத்தில் விவசாயம் அழிந்து, விவசாயிகள் இறந்து விடுவார்கள் என்பதை குறிக்கும் வகையில் மாணவர்கள் 2 பேர் மாலை அணிந்தும், வெள்ளை ஆடை உடுத்தியும் பிணம்போல் அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 4 மணியளவில் மாணவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு