மாவட்ட செய்திகள்

அரவக்குறிச்சி பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது

அரவக்குறிச்சி பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி, மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதற்கான தீர்ப்பில் திருக்குறள்களை மேற்கோள் காட்டி நீதிபதி அறிவுரையும் வழங்கி உள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் நான் தேர்தல் பிரசாரம் செய்த போது இந்து மதத்தை அவமதித்தும், மக்கள் இடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக கடந்த 14-ந்தேதி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றச்சாட்டு குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள புகார் குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

விசாரணை முடிவில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்தநிலையில் அந்த மனு மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது-

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்

என்று திருவள்ளுவர் தனது குறட்பாக்களில் கூறியுள்ளார்.

அதாவது சொற்களின் நன்மையை ஆராய்ந்த நல்லவர்கள் பேசும்போது, கேட்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளாத வண்ணம் பேச வேண்டும்

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாத சொற்களை சொல்லவே கூடாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் சர்ச்சை பேச்சு ஒரு பொது விவகாரமாக மாறியது. இதற்கு முன்பு கூட, இதேபோல் கடவுளை பற்றி தவறாக பேசியதாக ஒரு பெண், ஜாமீன் கேட்டு இந்த கோர்ட்டுக்கு வந்திருந்தார். இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து விவாதங்கள் நடத்துவது மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதாகும்.

ஒரு சிறிய தீப்பொறி, காட்டையே அழித்துவிடும். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அங்கு கூடியிருக்கும் பார்வையாளர்களை ஆக்கபூர்வமாக சிந்திக்க வைப்பதாக பேச்சு இருக்க வேண்டும். அதுவே பொதுமக்களை மேம்படுத்துவதற்கான தீர்வு. நம் நாட்டில் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டது போதும்.

இருந்தபோதும், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 15 நாட்களுக்குள் கரூர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற வேண்டும். வழக்கமான நிபந்தனைகள் பொருந்தும். இந்த வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு