மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேரை மட்டுமே அனுமதித்ததால் போலீசாருடன் வாக்குவாதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேரை மட்டுமே அனுமதித்ததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 8 பேரூராட்சி என 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஒருநாள் மட்டுமே உள்ளது. இதனால் நேற்று வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்தது.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் தேர்வு செய்து அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்ய தயார் நிலையில் உள்ளனர். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும் மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தள்ளு முள்ளு

இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று காலை முதலே திரண்டனர். அப்போது நகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அரசின் வழிகாட்டுதலின்படி வேட்பாளருடன் 2 பேரை மட்டுமே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்த நிலையில் ஆதரவாளர்களுடன் வந்திருந்த வேட்பாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீசாருக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் நகராட்சியில் போட்டியிட சுயேச்சைகள் அரசியல் கட்சிகள் என 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருமழிசை பேரூராட்சி

இதேபோல திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள 15 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது தேர்தல் அலுவலர் ரவி தலைமையில், உதவி தேர்தல் அலுவலர்கள் மதியழகன், சேகர், ஜானகிராமன், நிர்வாக மேலாளர் ஜோசப் ஆகியோர் வேட்புமனுக்களை பெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என ஒரே நாளில் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை திருமழிசை பேரூராட்சியில் போட்டியிட 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாள்

இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க., மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்ட உள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்