அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் அங்கேரிபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி 209 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 69 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக தமிழக அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும், தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும் அனைத்து துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.