மாவட்ட செய்திகள்

கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் சாவு

கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் ஒருவர் பலியானார். 24 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் செல்லியம்மன் கோவிலில் இருந்து 40 கோவில் காளைகளை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஜல்லிக்கட்டு திடலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து லால்குடி தாசில்தார் ராகவன் முன்னிலையில், கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 529 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரி சோதனை செய்தனர். அதேபோல 364 மாடுபிடி வீரர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்றன. பல மாடுகள் வீரர்களிடம் பிடிபட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் கல்லக்குடி நடுத்தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ்(வயது 40) மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் இறந்து போனார். இவர் ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர் ஆவார். அவருக்கு சாந்தி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், சைக்கிள், சலவை எந்திரம், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், தங்கம், வெள்ளி காசுகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை கல்லக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லக்குடி கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்திருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு