நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய கலெக்டர், பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும், அனைத்து துறைகளிலும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 532 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்பட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 50 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதைதொடர்ந்து தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முன்னதாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தன்னார்வ மாணவ, மாணவிகள் எவ்வித கட்டணமும் இன்றி மனுக்கள் எழுதி தரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.