மாவட்ட செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் 74 நாட்களாக சிக்கி தவித்த கானா நாட்டு கால்பந்து வீரர் - ஆதித்ய தாக்கரே உதவி

மும்பை விமான நிலையத்தில் 74 நாட்களாக சிக்கி தவித்த கானா நாட்டு கால்பந்து வீரருக்கு ஆதித்ய தாக்கரே உதவி செய்து உள்ளார்

தினத்தந்தி

மும்பை,

மேற்கு ஆப்ரிக்கா நாடான கானாவை சேர்ந்தவர் கால்பந்து வீரர் ராண்டி ஜூவான் முல்லர்(வயது23). இவர் கேரளாவை சேர்ந்த கிளப் அணிக்கு கால்பந்து விளையாட 2019-ல் நவம்பர் மாதம் இந்தியா வந்தார். இந்தநிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக மார்ச் மாதம் கானா திரும்ப விரும்பினார். இதற்காக அவர் கேரளாவில் இருந்து மும்பை வந்தார்.

பின்னர் இங்கு இருந்து கென்யா வழியாக கானா செல்ல இருந்தார். மார்ச் 30-ந் தேதி அவர் செல்ல இருந்த நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ராண்டி ஜூவான் முல்லர் மும்பை விமான நிலையத்தில் சிக்கினார்.

அங்கு சமோசா, பிரைட் ரைஸ் என கிடைக்கும் உணவை சாப்பிட்டு கொண்டு விமான நிலையத்தில் பொழுதை கழித்து வந்து உள்ளார். விமான நிலைய கழிவறையை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி உள்ளார். மும்பை விமான நிலைய ஊழியர்கள் ராண்டி ஜூவான் முல்லருக்கு முடிந்த உதவிகளை செய்து உள்ளனர்.

இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஒருவர் கூறுகையில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட எல்லா ஊழியர்களும் தங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்தனர். உணவு தவிர விமான நிலைய வை-பை வசதியை பயன்படுத்தவும் அவரை அனுமதித்தோம் என்றார்.

இந்தநிலையில் விமானநிலையத்தில் வெளிநாட்டு கால்பந்து வீரர் சிக்கியிருக்கும் தகவல் மராட்டிய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது முயற்சியால் 74 நாட்களுக்கு பிறகு சிவசேனா இளைஞர் அணியினர், ராண்டி ஜூவான் முல்லரை பாந்திராவில் உள்ள ஓட்டலில் தங்க வைத்தனர். இதுகுறித்து இளைஞர் அணி நிர்வாகி ராகுல் கானல் கூறுகையில், ராண்டி ஜூவான் முல்லர் தனது நேரத்தை விமான நிலைய செயற்கை பூங்காவில் கழித்து உள்ளார். விமான நிலைய ஊழியர்கள் மிகவும் உதவி செய்ததாக முல்லர் கூறினார். இந்த இளம் வயதில் ராண்டி ஜூவான் முல்லரின் தன்னம்பிக்கையை நினைத்து எனக்கு வார்த்தைகளே வரவில்லை என்றார்.

இதேபோல தனக்கு உதவி செய்த ஆதித்ய தாக்கரே, சிவசேனா இளைஞர் அணியினருக்கு ராண்டி ஜூவான் முல்லர் கண்ணீர் மல்க நன்றி கூறினார். மேலும் இந்தியாவுக்கு திரும்பி வருவீர்களா என்று கேட்ட போது அவர், எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் நான் ஏன் இந்தியாவுக்கு வர மாட்டேன்?. நான் கால்பந்து வீரன். விளையாட்டு என்னை எங்கு எல்லாம் அழைத்து செல்கிறதோ, அங்கு எல்லாம் செல்வேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

கால்பந்து வீரர் ராண்டி ஜூவான் முல்லருக்கு நேர்ந்த இந்த சம்பவம், 2004-ல் வெளியான ஹாலிவுட் படமான தி டெர்மினலில்' அமெரிக்க விமான நிலையத்தில் சிக்கிய டாம் ஹாங்கசின் கதாபாத்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு