பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம், வெங்கடராஜுகுப்பம், திருமலராஜுகுப்பம், அத்திமாஞ்சேரி, கொடிவலசை ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. வெளியகரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதியவர்கள் சென்றால் மருந்து மாத்திரை இல்லை என அலைக்கழிக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினர். தங்கள் பகுதியில் தெரு விளக்குகள் ஒன்று கூட எரியவில்லை, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
வெளியகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சுகப்பிரசவம் ஆகாது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூற உறவினர்கள் அந்த பெண்ணை உடனே வாகனத்தில் கொண்டு செல்லும்போது அந்த பெண்ணுக்கு நடுவழியில் சுகப்பிரசவம் ஆனது. இது போல் கர்ப்பிணிகளை அலட்சியப்படுத்துகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
கூட்டத்தில் ஒன்றியசெயலாளர் ரவீந்திரா, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், நகர செயலாளர் ஜோதிகுமார், கட்சி நிர்வாகிகள் வெங்கடபெருமாள், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.