திருவையாறு,
தஞ்சையில் இருந்து அரசு பஸ் ஒன்று கழுமங்கலம் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் மேலத்திருப்பூந்துருத்தியில் இருந்து ஆட்டோ ஒன்று திருவையாறில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருவையாறு நோக்கி வந்து கொண்டு இருந்தது.
கண்டியூர் அருகே காட்டுக்கோட்டை பாதை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மேலத்திருப்பூந்துருத்தி வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஐங்கரன்(வயது 11) மற்றும் கீழத்திருப்பூந்துருத்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகள் சந்தியா(14) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஐங்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்தில் பலியான ஐங்கரன் 6-ம் வகுப்பு படித்து வந்தான். 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சந்தியாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, திருவையாறு போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியண்ணன், நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
விபத்து நடந்தவுடன் அரசு பஸ் டிரைவர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பலியான ஐங்கரன் உடலை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுக்கோட்டைபாதையின் அருகில் வளைவு உள்ளதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இங்கு விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றிச்செல்வதாலும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்வதாலும் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றிச்செல்வதையும், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டிச்செல்வதையும் போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.