இடுக்கி,
இடுக்கி மாவட்டத்துக்கு, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்களை மர்மநபர்கள் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க போடிமெட்டு, கம்பம்மெட்டு, சின்னார், குமுளி ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுங்கத்துறை அதிகாரிகளும், போலீசாரும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் மர்மநபர்கள் நூதன முறையில் கஞ்சாவை கடத்தி செல்கின்றனர். குறிப்பாக பெண்களும், கல்லூரி மாணவர்களும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கஞ்சாவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 60 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கல்லூரியில் 60 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுங்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சுங்கத்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சுங்கத்துறையினர் முடிவு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக உடும்பன்சோலை பகுதியில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு சினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் நெப்போலியனை சுங்கத்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அவர் துண்டுபிரசுரத்தை வினியோகம் செய்து விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
இதேபோல் கஞ்சாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளால் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.