விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டார்.
பின்னர் அவர் அங்கு இருந்த பொதுமக்களிடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. எனவே அனைவரும் தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு வில்லைகள்
வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகளை குடிநீர் கேன்களில் ஒட்டி வினியோகிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து கலெக்டர் திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு சென்று அங்கு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக உணவகத்தில் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், திருவள்ளூர் உணவு
பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.