குன்னூர்
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் கரடிகள், சிறுத்தைப்புலிகள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அவைகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கரடிகள், சிறுத்தைப்புலிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரிமரா அட்டி குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. அந்த தேயிலை தோட்டங்கள் வழியாக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் பொதுமக்கள் பீதியில் வாழும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் 2 சிறுத்தைப்புலிகள், 3 கரடிகள் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் உலா வந்தன. இது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
கூண்டு வைத்து...
இதையடுத்து நேற்று காலையில் அந்த பதிவை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட அன்றாட தேவைக்காக வெளியே செல்பவர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோமோ? என்ற அச்சத்துடன் அவர்கள் வெளியே நடமாடுவதை காண முடிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் எப்போதாவது வனவிலங்குகள் வரும் சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால் எங்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் வருகின்றன. தற்போது அதிக எண்ணிக்கையில் வர தொடங்கி விட்டன. அவைகளை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.