நெல்லை,
இடைத்தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி குறித்து திருநாவுக்கரசர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெறுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுக்க வேண்டும். சேலம்-சென்னை இடையே அமைக்கப்படும் 8 வழிச்சாலையால் மிகப்பெரிய பயன் ஏற்படப்போவதில்லை. விவசாயிகளின் சொத்துக்களை அபகரித்து, நிலத்தை அழித்து அவசர கோலத்தில் இந்த சாலையை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஏற்கனவே சேலம்-சென்னை இடையே உள்ள சாலையை மேம்படுத்தினாலே பயண நேரம் வெகுவாக குறையும். புதிய சாலை திட்டத்தை கைவிட்டு, தமிழகத்திலுள்ள மற்ற சாலைகளை மேம்படுத்த அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டங்களை போலீசார் மூலம் அச்சுறுத்தி அடக்க நினைப்பது அரசின் பாசிச போக்கை காட்டுகிறது.
பெட்ரோல், டீசல் விலை அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிகம். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்து அதன் விலையை குறைக்க வேண்டும். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை பொறுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இது, மோடி அலை நாட்டில் முடிவுக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் ராகுல் அலை வீசத்தொடங்கி உள்ளதை காட்டுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), சங்கரபாண்டியன் (மாநகர்) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.