வாலாஜாபாத்,
வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட முத்தியால்பேட்டையில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையை ஒட்டி குடியிருப்புகளும், பள்ளி, கோவில், தேசிய மாணவர் படைக்கான பயிற்சி முகாம் மைதானம், கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ளது. முத்தியால்பேட்டையில் செயல்படும் இந்த மதுக்கடையால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மதுக்கடையை தங்கள் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
ஆனால் அவர்களுடைய கோரிக்கை மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்தியால்பேட்டை கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் கைகளில் தேசியகொடியை ஏந்தியபடி மகாத்மா காந்தியின் உருவ படத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்கள் கலைந்து சென்ற பின்னர் அவர்களின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல மதுக்கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது.