அடையாறு,
சென்னை ராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 10 கட்டிடத்தொழிலாளர்கள் அங்கேயே தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 20) மற்றும் கடலூரை சேர்ந்த முல்லைநாதன் (22) ஆகியோரும் அங்கு தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கட்டிடத்தொழிலாளிகள் அனைவரும் ஓய்வில் இருந்தனர்.
மதியம் சின்னப்பராஜ், முல்லைநாதன் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இரவிலும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இதையடுத்து முல்லைநாதன் அங்கிருந்து சென்றுவிட்டார். சின்னப்பராஜ் மது போதையில் அங்கேயே படுத்து தூங்கி விட்டார். சகதொழிலாளர்கள் அனைவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் அங்கு வந்த முல்லைநாதன், சின்னப்பராஜ் மீதான ஆத்திரம் அடங்காமல் அங்கு கிடந்த இரும்பு கம்பியால், தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பராஜின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த சின்னப்பராஜ், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் முல்லைநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நேற்று காலையில் எழுந்த சகதொழிலாளர்கள், சின்னப்பராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராயப்பேட்டை போலீசார், கொலையான சின்னப்பராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சகதொழிலாளியான முல்லைநாதனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.