திருவாரூர்,
காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் வன்மீகபுரத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோபால் எம்.பி. வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் உரிய நேரத்தில் அணை திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்க மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வலியுறுத்தி இந்த கூட்டம் நடக்கிறது.
காவிரி பிரச்சினை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. காவிரி பிரச்சினையில் எப்போதும் நமக்கு பாதகமான சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பாக 1892-ம் ஆண்டு சென்னை மாகாணமும், மைசூர் சமஸ்தானமும் காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்படிக்கை செய்தது.
1924-ம் ஆண்டு கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூர் அணையும் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது காவிரி நீர் உடன்படிக்கை தொடர்பாக நீர் பகிர்வு நடந்து வந்தது. 1956-ல் மொழிவாரியாக மாநில மறுசீரமைப்புக்குப்பின் குடகு பகுதி, கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் காவிரி நீர் பங்கீடு செய்வதில் இழுபறி நடந்தது.
காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி. 1970-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பேசிய கருணாநிதி, கர்நாடகம், ஹேமாவதி அணை கட்ட தமிழகம் எந்த மறுப்பும் தெரிவிக்காது என கூறி உள்ளார். தமிழகத்தின் உரிமையை அப்போதே விட்டுக்கொடுத்தவர் கருணாநிதி. காவிரியின் உப நதிகளில் பல்வேறு கட்டுமான பணிகளை தன்னிச்சையாக கர்நாடகம் தொடங்கியது. அதை தடுக்க எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.
இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக 1971-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்தியில் இந்திராகாந்தி பிரதமர். அந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவியது. இதனால் மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து 1972-ம் ஆண்டு, தன்னை காப்பாற்ற, தனது அரசை காப்பாற்ற, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்று தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட விவசாய சங்க தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டது. அதன் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் பின்னர் காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி 1991-ம் ஆண்டு கர்நாடகம், தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கியது. அது அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் 80 மணி நேரம் உண்ணாவிரதத்தை ஜெயலலிதா மேற்கொண்டார். பின்னர் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் காவிரி நீர் பிரச்சினையில் சுணக்கம் ஏற்பட்டது.
ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதைப்பற்றி கவலைப்படவில்லை. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்தது. 192 டி.எம்.சி. தண்ணீர், கர்நாடகம் வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது. அப்போது நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா குரல் கொடுத்தார்.
இதையடுத்து கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் அ.தி.மு.க. பங்கேற்றது. அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் உள்ளதை பயன்படுத்திக்கொண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ய வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது நடவடிக்கை எடுத்து இருந்தால் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீராவது கிடைத்து இருக்கும். ஆனால் தி.மு.க. கோட்டை விட்டு விட்டது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டது.
ஆனால் இப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருந்த போது அழுத்தம் கொடுத்து இருந்தால் இந்த பிரச்சினை தீர்ந்து இருக்கும். 11 ஆண்டு காலமாக விவசாயிகள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டியது இருக்காது.
காவிரி நீர் பிரச்சினையின் இந்த நிலைக்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டு இருந்தால் தமிழகத்துக்கு பாதுகாப்பு உரிமை கிடைத்து இருக்கும். தண்ணீர் கிடைத்து இருக்கும். அந்த தவறை மறைக்க ஸ்டாலின் இன்று ஊர், ஊராக நடைபயணம் மேற்கொள்கிறார்.
காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றத்தில் 24 நாட்கள் தொடர்ந்து குரல் கொடுத்து பாராளுமன்றம் செயல்படாத வகையில் நடவடிக்கையை அ.தி.மு.க. தான் எடுத்தது. நாங்கள் மத்திய அரசுடன் கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் கோரிக்கை தான் வைக்க முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலம் முதல் காவிரி பிரச்சினையில் நமது உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அ.தி.மு.க. தான்.
ஆனால் நேரத்துக்கு நேரம் பச்சோந்தி போல நிறம் மாறும் கட்சி தான் தி.மு.க. அ.திமு.க. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். 2007-ம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு 2011-ம் ஆண்டு வரை அரசிதழில் வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சரான பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்து விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டினார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தார். சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து சட்டத்தின் மூலம் தற்போது குழுக்களை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பிரதமருக்கு பலமுறை கடிதமும், தமிழக அரசு எழுதியது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசு காலதாமதம் செய்ததால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினோம். அதில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதோடு அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தினர் சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால் மத்திய அரசு நீர்வளத்துறை மந்திரியை சந்திக்குமாறு கூறியது. இது தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருடன் கலந்து பேசியபோது, மத்திய அரசு தட்டிக்கழிக்க பார்க்கிறது. எனவே நீர்வளத்துறை மந்திரியை சந்திக்க கூடாது என்றனர். அவர்கள் அழைத்தால் நாம் சந்திக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் தி.மு.க. தன்னிச்சையாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றியது. இது எந்த வகையில் நியாயம். காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் தமிழகம் வந்தபோது எல்லாம் நான் அவரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.
6 வார காலத்தில் வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யாததால் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. விவசாயிகளின் உரிமையை பெற இறுதிவரை நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் காவிரி பிரச்சினையில் தி.மு.க. ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஊர், ஊராக, தெருத்தெருவாக சென்று மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்கிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
தற்போது மு.க.ஸ்டாலின் என்னைப்பற்றியும், தமிழக அரசை பற்றியும், மானங்கெட்ட எடப்பாடி அரசு, எடுபிடி பழனிசாமி அரசு என்று கூறுகிறார். ஒரு கட்சியின் செயல் தலைவர், முன்னாள் துணை முதல்-அமைச்சர் இப்படி பேசுகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார். மனநிலை சரியாக இருந்தால் இப்படி பேச மாட்டார்.
இந்த ஆட்சி கவிழ வேண்டும். கட்சி உடைய வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். அது ஒருபோதும் நடக்காது. எனது தலைமையிலான அரசு 1 ஆண்டை கடந்து வெற்றி நடைபோடுகிறது. எதிலும் குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. எனது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டிய போது தி.மு.க சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக ஆக்கியது. இதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.
தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அ.தி.மு.க.வில் விசுவாசம் உள்ளவர்கள் எந்த பதவிக்கும் வரலாம். அதனால் தான் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளேன். நிச்சயம் நான் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன்.
மழைநீரை சேமிக்க குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள அந்தந்த ஏரிக்குட்பட்ட பாசன விவசாய சங்கங்களுக்கு அதற்கான நிதியை ஒதுக்கி பணிகளை சிறப்பாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மழைநீர் வீணாகாமல் இருப்பதை தடுக்க 3 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. விவசாயிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள். விவசாயிகள் வாழ அனைத்து உதவிகளையும் இந்த அரசு நிச்சயம் செய்யும்.
நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. நிச்சயம் விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற்றுத்தரும் வரை போராடும். காவிரி நீரை பெற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம். விவசாயிகளுக்காக துரோகம் செய்த தி.மு.க.வுடன், கம்யூனிஸ்டு கட்சிகள் எப்படி சேர்கின்றன என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மன்னார்குடி ரெங்கநாதன் உள்பட விவசாய சங்க தலைவர்கள், தஞ்சை கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாப்பா.சுப்பிரமணியன், ராஜேந்திரன், அன்பு, ராம.குணசேகரன், தமிழ்ச்செல்வம், தங்க.தமிழ்கண்ணன், ஜீவானந்தம், ராஜாசேட், சேகர், அரிகிருஷ்ணன், நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், நகர செயலாளர்கள் மூர்த்தி (திருவாரூர்), சுவாமிநாதன், பஷீர் அகமது, குணசேகரன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர் செந்தில்குமார், கூத்தாநல்லூர் நகர துணை செயலாளர் உதயகுமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி நன்றி கூறினார்.