நாகப்பட்டினம்,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பூராசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு ஜீவாதார உரிமைகளை பெற்று தர சட்ட பூர்வமாக போராடி வருகிறது. காவிரி பிரச்சினையில் பல்வேறு கட்சிகள் தங்களை முன்னிறுத்தி அறப்போராட்டங்களை நடத்துவதுபோல் ஒரு மாய தோற்றத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் குணங்களை ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவின் வழியில் தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். அவரது வழியை பின்பற்றி அ.தி.மு.க. என்ற இயக்கத்தை ஜெயலலிதா வழி நடத்தி வந்தார். தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்கு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியதால் அனைத்து மக்களின் பாராட்டையும் ஜெயலலிதா பெற்றார்.
ஏழை மக்களுக்காக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள், விலையில்லா வேட்டி சேலை, விலையில்லா ஆடு, மாடு என பல்வேறு நலத்திட்டங்களை ஏழை மக்களுக்காக ஜெயலலிதா செயல்படுத்தினார்.
கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் கர்நாடக அரசு பல்வேறு அணைகளை கட்டியது. ஆனால் அதனை தடுத்து அவர் போராடவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பல முறை கடிதம் மூலமும், நேரிலும் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.
2013-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டவர் ஜெயலலிதா. ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் காவிரிக்காக நடைபயணம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை. மேலும் அ.தி.மு.க. அரசால் எந்த ஜாதி, மத பிரச்சினையும் இல்லை. எனவே காவிரி பிரச்சினையை நமது ஜீவாதார பிரச்சினையாக கருதி போராடி, காவிரி நீரை பெற்றுத்தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து விபத்தினால் பாதிக்கப்பட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு நிதி உதவிகளை அவர் வழங்கினார்.
கூட்டத்தில் எம்.பி.க்கள் கோபால், பாரதி மோகன், எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆசைமணி, விஜயபாலன், நடராஜன், சக்தி, கோடிமாரி, கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்க.கதிரவன் நன்றி கூறினார்.