மாவட்ட செய்திகள்

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கேட்டு, ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி மீது அடக்கு முறையை ஏவிய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம், சென்னை, அண்ணாசாலையில் ஜிம்கானா கிளப் அருகில் நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் போராட்டத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசியதாவது:-

உத்தரபிரதேசத்தில் ராகுல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை போன்று கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு எதிர்கட்சி தலைவருக்கும் ஏற்பட்டதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல போவது சட்டவிரோதமானதா? ஜனநாயகத்துக்கு புறம்பான காரியமா? ஆறுதல் கூறுவதில் என்ன தவறு உள்ளது? பா.ஜ.க. அரசுக்கு சிம்ம சொப்பனமாக ராகுல் திகழ்வதால் அவரை ஜனநாயக கடமையை செய்ய விடாமல் அவருடைய குரலை ஒடுக்குவதற்காக இதுபோன்ற தந்திர வேலைகள் நடத்தப்படுகிறது. இது ஒரு போதும் வெற்றியும் பெறாது, இதற்காக காங்கிரஸ் கட்சி பயப்படவும் செய்யாது.

இதயத்தில் இடம் பிடித்தார்

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் எவருக்கும் நடக்க கூடாது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியிருப்பது ராகுலின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். ராகுல் தாக்கப்பட்டு இந்திய மண்ணில் விழவில்லை, மடியில் விழுந்து உள்ளார். இதனால் கோடான கோடி பேரின் இதயத்தில் அவர் இடம் பிடித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மாநில பொதுச்செயலாளர் ஜோதி, கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகை குஷ்பு

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்ட பொருளாளர் டில்லிபாபு மற்றும் நடிகர் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகி பெரம்பூர் நிசார் மற்றும் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் குஷ்பு கூறும்போது, ராகுல் காந்தி தலைவர் இல்லை என கூறுபவர்கள் அவரது ஒவ்வொரு அடிக்கும் அஞ்சுகின்றனர். கல்வி கொள்கையில் மொழியை கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனால் மட்டுமே கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தேன். இதில் மொழித்திணிப்பு என எதுவும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமே கூறினேன். இதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பும் கோரிவிட்டேன் என்றார்.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சூளை தபால் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் பொருளாளர் நா.செ.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்