மாவட்ட செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வங்கி அதிகாரி

திருப்பூரை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தான் கலெக்டர் ஆனவுடன் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பாடுபடுவேன் என்று கூறினார்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் அருகே உள்ள 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பனியன் துணிகளில் பிரிண்டிங் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பர்வதம். இவர்களுடைய மகன் பாலச்சந்தர்(வயது 27). இவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வை எழுதியிருந்தார். இதில் அகில இந்திய அளவில் 129-வது இடமும், தமிழக அளவில் 5-வது இடமும் பெற்று பாலச்சந்தர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எங்கள் வீட்டின் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வரை தமிழ்வழியில் படித்தேன். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்காக ஆங்கில செய்தித்தாளை வாங்கி படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1,125 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் தொழில்நுட்ப படிப்பை தேர்வு செய்து படித்தேன். பட்டப்படிப்பை முடித்தவுடன் எனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஊக்குவிப்பால் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். முதன் முறையாக 2012-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன். அதில் வெற்றி பெற முடியவில்லை. அதையடுத்து 2013-ம் ஆண்டு வங்கி தேர்வை எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து வங்கி பணியில் சேர்ந்தேன்.

ஆனாலும் எனது ஒரே குறிக்கோள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆக வேண்டும் என்பது தான். அதனால் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி வந்தேன். 2016-ம் ஆண்டு எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். மீண்டும் கடுமையாக முயற்சித்து தற்போது 6-வது முறையாக எழுதிய எழுத்துத்தேர்விலும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சி பெற்று விட்டேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நான் கலெக்டர் ஆனவுடன் அரசின் திட்டங்களை மக்களை சென்றடைய பாடுபடுவேன். இந்த சமூகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அந்த வகையில் எனது தங்கை பபிதாவையும் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைக்கிறேன். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நம்மால் கலெக்டராக முடியுமா? என்று யோசித்துக்கொண்டே இருக்கக்கூடாது. நம்மாலும் முடியும் என்று விடா முயற்சியுடன் பாடுபட்டால் நிச்சயம் சாதிக்க முடியும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்