ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் சர்வதேச காணாமல்போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா வெளியிட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா பேசியதாவது:- தற்போதுள்ள பதற்றமான மக்கள் நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை தனியாக வாகனங்களிலோ, பொது இடங்களிலோ எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் குழந்தைகளை வெளிஇடங்களுக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளின் சமீபத்திய புகைப்படத்தை எடுத்து வைத்துள்ளதோடு, பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளின் அங்க அடையாளங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
செல்போன் எண்
பெற்றோர்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் உங்களின் கவனங்களை மீறி தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு வெளிநபர் கொடுக்கும் பொருட்களை வாங்கக்கூடாது என்ற மனநிலையை ஏற்படுத்துவதோடு, மனம் கவரக்கூடிய பொருட்களை யார் கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
ஆபத்து என்று உணரும் நேரங்களில் பெற்றோரின் செல்போன் எண், முகவரி உள்ளிட்டவைகளை கூறும் அளவிற்கு தயார் படுத்த வேண்டும். மேலும், முக்கியமாக குழந்தைகளுக்கு ஆபத்தான நேரங்களில் சத்தமாக கத்தி கூச்சலிட வேண்டும் என்பதை உணர்த்தி கற்றுக்கொடுக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட குழந்தை பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத புதிய நபர்கள் மூலம் பள்ளிக்குழந்தைகளை அனுப்பி வைக்கக்கூடாது. பொதுமக்களை காக்கும் கடமை காவல்துறைக்கு இருந்தாலும் அதற்கு பெற்றோர் தங்களின் பக்கம் இருந்து ஒத்துழைப்பு வழங்கினால்தான் முழுமையாக பாதுகாப்பு நிலையை எட்டமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மனித கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவரெத்தினம் ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.