புதுச்சேரி,
புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இது புதுவை சுற்றுலாத்தலங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலும், ஆறும் இணையும் முகத்துவார பகுதிக்கு படகுகள் மூலம் செல்லவேண்டும்.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பண்டிகை காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் இங்கு அலைமோதுவது வழக்கம். இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சொகுசு படகு, ஸ்பீடு, மோட்டார் சைக்கிள் படகு, பஸ் படகு என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. தனியார் பங்களிப்புடன் சொகுசு படகு வீடு ஒன்றும் இயங்குகிறது.
தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நோணாங்குப்பம் குழாமில் படகு சவாரிக்கான கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு சாதாரண படகு சவாரி கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.300 ஆகவும், மோட்டார் படகில் குறுகிய தூர பயணத்துக்கு 150ல் இருந்து ரூ.200 ஆகவும், நீண்ட தூர பயணத்துக்கு 200ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஜெட்ஸ்கை நீண்ட தூர பயணத்துக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1500 ரூபாயாகவும், குறுகிய தூர பயணத்துக்கு 800ல் இருந்து 1200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு பயணத்துக்கு 400ல் இருந்து 600 ரூபாயாகவும், 10 பேர் சீட் கொண்ட ஸ்பீடு படகு நீண்டதூர பயணத்துக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், 4 பேர் சீட் கொண்ட ஸ்பீடு படகு ஆயிரத்தில் இருந்து 2400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல் ஊசுட்டேரி படகு குழாமிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மோட்டார் படகில் குறுகிய தூர பயணத்துக்கு நபர் ஒருவருக்கு 70ல் இருந்து 100 ரூபாயாகவும், நீண்ட தூர பயணத்துக்கு 100ல் இருந்து 180 ரூபாயாகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. படகு சவாரி கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.