ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளராக கோவிந்தராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மேல்தலையாட்டுமந்து பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற சென்றபோது, கடைகள் முன்பு குப்பைகளை கொட்டக்கூடாது, மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளிடம் கூறினார்.
அப்போது அந்த கடைகளின் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் மாரி என்பவர் குடிபோதையில் கோவிந்தராஜை தாக்கினார். இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, தாக்குவது, மிரட்டுவது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஆட்டோ டிரைவர் மாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், வடிகால் பணியாளர்கள், நகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் துப்புரவு மேற்பார்வையாளரை தாக்கிய ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு இருந்தனர். இதனால் குப்பைகளை சேகரிப்பது, தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் விஜய சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஆட்டோ டிரைவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் குப்பைகள் தேக்கம் அடைவதால், அதனை அப்புறப்படுத்த வேண்டி உள்ளது. எனவே நீங்கள் பணிக்கு திரும்புங்கள் என்று கூறினார்.
அதற்கு தூய்மை பணியாளர்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். ஆட்டோ டிரைவரை கைது செய்யாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து, இந்த போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.