மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கிராமமக்கள் திடீர் சாலை மறியல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள அ.குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, 3-வது மைல் ஆகிய பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து முருகேசன்நகர், கோரம்பள்ளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று போராட்டத்தை தொடங்கினர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த மக்கள் நேற்று காலை 10.30 மணி முதல் தனித்தனியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்கள் இந்திய உணவுக்கழக குடோன் வரை வாகனங்களில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். சில்வர்புரத்தில் போராட்டம் நடத்தி வரும் சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் தலையில் கருப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு வந்தனர். அவர்களில் 10 பேரை மட்டும் மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். இதனால் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம், முருகேசன்நகர், தபால் தந்தி காலனி என ஒவ்வொரு கிராமமாக மக்கள் கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது.

ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், போலீசாரால் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் எங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும். அவர் வரும் வரை நாங்கள் இங்கு இருந்து செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமாபாபு உள்ளிட்ட சிலர் கலெக்டரை சந்திக்க சென்றனர்.

அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த, மக்கள் பாதி பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாகனங்கள், அருகில் உள்ள சோரீஸ்புரம் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

போராட்டத்தின் போது, வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த கியாஸ் டேங்கர் லாரியின் கண்ணாடியை போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென அடித்து உடைத்தார். அதே போன்று அங்கு பஸ் நிறுத்தத்தில் இருந்த ஸ்டெர்லைட் பெயர் பலகையையும் ஒருவர் கல்வீசி தாக்கி சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியது.

அப்போது, கலெக்டர் மக்களை சந்திக்க இருப்பதாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். உடனடியாக மறியலில் ஈடுபட்டு இருந்த சில கிராமத்தை சேர்ந்தவர்கள் மறியலை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றனர். மற்றவர்கள் சாலை மறியல் தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் பாத்திமாபாபு முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கலெக்டர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையின் மாசு குறித்து மக்கள் பல்வேறு மனு கொடுத்து உள்ளர்கள். இந்த மனு மீது சட்டரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுக்க உள்ளோம். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவரை நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் மனுக்களை கொடுங்கள். அதன் அடிப்படையில் அரசுக்கும் அறிக்கை அனுப்பப்படும் என்று கூறினார்.

பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதனால் மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன்பிறகு சாலைமறியலில் ஈடுபட்டு இருந்த சிலர் கோஷம் எழுப்பியபடி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக சென்றனர். மீதம் இருந்த மக்களும் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் காலை 11.45 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் மதியம் 1.45 மணிக்கு முடிவுக்கு வந்தது. 2 மணி நேரமாக மறியலில் ஈடுபட்ட மக்கள் போராட்ட குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பிரபு, வக்கீல் ராமச்சந்திரன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகம் உள்ளே வந்தனர். அவர்கள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர். கலெக்டர் நேரில் வந்து எங்கள் குறைகளை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் மீண்டும் தர்ணா போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து பேசினர். அவர்களிடம் இருந்து மனுக்களையும் கலெக்டர் பெற்றுக் கொண்டார். மக்களின் உணர்வுகள் எனக்கு புரிகிறது. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டங்கள் மதியம் சுமார் 2.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி