நெல்லை,
நாடு முழுவதும் சுதந்திரதினவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் சுதந்திரதினவிழா நடைபெற உள்ளது. அன்று காலை கலெக்டர் ஷில்பா மைதானத்துக்கு வருகிறார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பூங்குகொத்து கொடுத்து வரவேற்கிறார்.
கலெக்டர் கொடியேற்றுகிறார்
காலை 8.50 மணிக்கு கலெக்டர் ஷில்பா தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் அணிவகுத்து மரியாதை செலுத்துகிறார். அந்த மரியாதையை கலெக்டர் ஷில்பா ஏற்று கொள்கிறார். பின்னர் சிறந்த முறையில் சேவை செய்த அரசு ஊழியர்களை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
ஒரு கலை நிகழ்ச்சி
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களின் வீடுகளிலேயே அந்தந்த பகுதி தாசில்தார்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்கள். பின்னர் மாணவ, மாணவிகள் ஒரே ஒரு கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்படுகின்றன. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்காலிக கடைகள் அகற்றம்
முன்னதாக, கொரோனா தொற்று பரவலை தடுக்க நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்த காய்கறி கடைகள் தற்காலிகமாக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைக்க அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு காய்கறி வியாபாரம் நடந்து வந்தது. சுதந்திரதின விழா நடத்துவதற்கு ஏதுவாக மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் வ.உ.சி. மைதானத்தில் ஆய்வு நடத்தினார்கள். மேலும் அங்குள்ள தற்காலிக கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வ.உ.சி. மைதானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள குப்பைகளை அகற்றி சுதந்திர தின விழா நடத்த மைதானத்தை தயார் செய்தனர்.
வ.உ.சி.மைதானம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சி. மைதானத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.