திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் நேற்று புரட்சி மக்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் அரவிந்தன் தலைமையில் மாநில துணை தலைவர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சக்திதாசன், ரமேஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்வளவன் மற்றும் பலர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் பிரபல மேல்நாட்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் மேல்நாட்டு தொழிற்சாலையின் கனரக வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.