ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்துவந்த மீனம்பாக்கம் போலீசார், போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போலீசார், கல்லூரிக்குள் போராட்டம் நடத்தலாம். கல்லூரிக்கு வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி நுழைவு வாயில் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டையில் உள்ள ஆலிம் முகமது சாலே என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர்.
கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தை கைவிடாமல் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.